சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடிச்சென்ற 2 பெண்கள்! சென்னை: புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர், அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர் வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல ராஜகுமாரி, ஆனந்தராகம் உள்ளிட்டப் பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலின் படப்பிடிப்பானது நேற்று பெரம்பூரில் உள்ள ரேவதி ஜவுளிக்கடையில் நடந்துள்ளது. அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அழகப்பன் விலை உயர்ந்த தனது செல்போனை கடையில் உள்ள டேபிளில் வைத்து படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் படப்பிடிப்பு முடிந்த பின்பு வைக்கப்பட்ட செல்போனை, அழகப்பன் எடுக்க வந்தபோது செல்போன் காணாமல் போயுள்ளது. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் துணிக்கடை நிர்வாகத்தினரிடம் அழகப்பன் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நிர்வாகத்தினர் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த போது, துணி வாங்குவதற்காக வாடிக்கையாளர் போல வந்த இரு பெண்கள், ஊழியர்களிடம் துணி வாங்குவது போல பேச்சு கொடுத்து அழகப்பனின் செல்போனை லாவகமாக திருடிச் செல்வது சிசிடிவில் பதிவாகி இருந்தது.
பின்னர், ரூ.60ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடுபோனது தொடர்பாக நடிகர் அழகப்பன் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போனை திருடிச்சென்ற இரு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சின்னத்திரை நடிகரின் செல்போன் திருடுபோனதால் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அபராதம் விதித்த போலீசாருக்கு அரிவாள் வெட்டு