போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகனம் கவிழ்ந்து விபத்து! சென்னை:ஆவடி திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பில் வசிப்பவர், மாரிமுத்து (54). இவர் மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (டிசம்பர் 24), இரவு மாதவரம் பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தணிக்கை முடித்துவிட்டு நள்ளிரவு ஆவடி நோக்கி போலீஸ் வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
போலீஸ் வாகனத்தை வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஏட்டு மகாவீரன் (38) ஓட்டிச்சென்றார். அப்போது வாகனம் திருமுல்லைவாயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமாக இழுத்துச்சென்று சாலையோரம் இருந்த தள்ளுவண்டியை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த மரத்தின் மீது மோதி தலை கீழாக கவிழ்ந்து நொறுங்கியது.
இதில் காரின் முன் பக்க கண்ணாடி உடைந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்துவின் முகம் மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேபோல் ஓட்டுநர் காவலர் மகாவீரனின் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளான காரில் இருந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: Video : விஜய் ரசிகர்களை அடித்த பவுன்சர்கள்!