தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TTF Vasan: சர்ச்சையில் சிக்கிய மஞ்சள் வீரன் - பாய்ந்தது 2 பிரிவுகளின் வழக்கு

யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TTF Vasan
TTF Vasan

By

Published : Jul 5, 2023, 12:02 PM IST

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்

சென்னை: தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து அதை வீடியோவாக தனது யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமடைந்தவர், டி.டி.எஃப் வாசன். இவருக்கு அதிகளவில் இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த டி.டி.எஃப் வாசன், சமீபத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியாகி இளைஞர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

ஏற்கனவே அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் எனப் பல்வேறு சாலை விதிகளை மீறியதாக டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் சிக்கி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நேற்று (ஜூலை 04) காலை 6.30 மணியளவில் பிரபல யூடியூபரான டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வந்துள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அருகே இருந்த பிரிட்ஜ் மீது இடித்து, எதிர்பாராதவிதமாக முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கீழே விழுந்து, அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்றும் காரின் முன்பக்கம் சேதமடைந்தது.

உடனடியாக டி.டி.எஃப் வாசன் மற்றும் அவருடன் பயணித்த நண்பர்கள் காரை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து, சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, டிடிஎஃப் வாசன் நடிக்கும் 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் செந்தில் செல் அம், டி.டி.எஃப் வாசன் மற்றும் ஒருவர், நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக காரில் அதிவேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பிரிட்ஜ் மீது இடித்து முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது இயக்குநர் செந்தில் செல் அம் என்பதும், விபத்தில் காயம் அடைந்தது சென்னையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக இயக்குநர் செந்தில் செல் அம் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், அபாயகரமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தரவில்லை எனவும்; புகார் கொடுக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டி.டி.எஃப் வாசன் வந்த கார் அதிவேகமாக வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பிரிட்ஜில் இடித்து முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அடுத்த கட்டமாக அவர்களை போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்துக்கு காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details