சென்னை:தாம்பரம் அடுத்து பெருங்களத்தூர் கலைஞர் சாலையில் மதன் செல்வக் குமார் என்பவர் லேப்டாப் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று (செப்.19) இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று (செப்.20) காலை கடைக்கு சென்று பார்த்தபோது, கடையின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெளியான சிசிடிவி காட்சிகள் எந்த ஒரு பதற்றமுமின்றி கொள்ளை
இதையடுத்து மதன் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புதிய மற்றும் பழைய லேப்டாப்கள், மவுஸ், கீ போர்டு என நாக்கு லட்சம் மதிப்புள்ள பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இரண்டு கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து, கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டே, எந்த ஒரு பதற்றமுமின்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சாதுரியமாக லேப்டாப்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து லேப்டாப் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு அடையாளம் தெரியாத கொள்ளையர்களையும் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது பாய்கிறது குண்டர் சட்டம்