தமிழ்நாடு முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமவள கொள்ளையைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஜி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் வாங்கப்பட்ட 977 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஆர்.பி. உள்ளிட்ட பலருக்குச் சொந்தமான 103 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் வாங்கப்பட்ட மற்ற சொத்துக்களைக் காவல் துறை உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் கண்டறியும் முயற்சி தொடர்ந்து நடந்து வருவதாகவும், பி.ஆர்.பி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக 2012ஆம் ஆண்டு முதல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, சட்டவிரோதமான வெடிமருத்துகளைப் பயன்படுத்துதல், அவற்றைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்பட பல்வேறு பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தலைத் தடுப்பதற்காக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முழுமையாகப் பணியை நிறைவு செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கிரானைட் கடத்தலைத் தடுக்க சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் - தமிழ்நாடு அரசு தகவல் - CCTV camera fitting work
தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தலைத் தடுப்பதற்காக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
granite smuggling
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியைக் கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கிரானைட் குவாரிகள் டெண்டர் நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!