தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு; கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என வாதம்!

Minister Senthil Balaji Fraud case: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்ததை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 2:13 PM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க:நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்!

அதனை அடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அப்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (டிச.14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் சிலரை விசாரிப்பது தொடர்பாக அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:எண்ணூரும், எண்ணெய் கசிவும்.. பாதிப்புக்கு உள்ளாகும் பல்லுயிரினங்கள்!

ABOUT THE AUTHOR

...view details