சிங்கப்பூர் நாட்டில் வசித்துவருபவர் வின்சென்ட் செல்வசேகர் கேசன். இவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை ராம் நகர் பகுதியில் 4 ஆயிரத்து 800 சதுர அடி கொண்ட நிலம் ஒன்று உள்ளது. இவரது நிலத்தை சில நபர்கள் போலியான ஆவணங்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துவிட்டதாக பொது அதிகார முகவரான சரவணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுதி கொடுத்து வந்த மேற்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த சொர்ணலதா (48) மற்றும் லலிதா (52) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் வின்சென்ட் செல்வசேகர் போல் ஒரு நபரை ஆள்மாறாட்டத்துக்கு ஏற்பாடு செய்து, போலியான பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் சொர்ணலதா தன் பெயருக்கு பொது அதிகாரம் பெற்றுள்ளார்.