தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.18 லட்சம் ஆன்லைன் மோசடி; வெளிநாடு தப்ப முன்றவர் கைது!

சென்னை: 'வாவ் காயின்' எனப்படும் ஆன்லைன் முதலீட்டில் லாபம் ஈட்டி தருவதாகக் கூறி சென்னையில் ரூ.18 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறைவாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

18 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது.

By

Published : Jul 16, 2019, 8:59 PM IST

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு 'வாவ் காயின்' நிறுவனம் செயல்படுகிறது. இது இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனம். இந்த திட்டத்தில் சட்டவிரோதமான கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது. வருமான வரித்துறையினருக்கு தெரியாமல் இருக்க ஆன்லைனில் முதலீடு செய்யப்படுகிறது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி(38). கடந்த வருடம் இவருக்கு முகநூல் மூலமாக பழக்கமான மாதேஷ் என்பவர் வாவ் காயின் நிறுவனத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைக்கூறி அண்ணாநகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என ஆசையைத் தூண்டியதால், தனது வங்கிக்கணக்கிலிருந்து இந்திராணி ஆன்லைனில் ரூ. 18 லட்சம் ரூபாய் பணத்தை மொத்தமாக சீனிவாசலு உள்ளிட்டோர் நடத்தி வரும் நிறுவன வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். 6 மாதத்தில் முதலீடு செய்த ரூ.18 லட்சம் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் விசாரித்தபோதுதான் இந்திராணியிடமிருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்திராணி 2018ஆம் ஆண்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது வழக்குப்பதிவு செய்யவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அண்ணாநகர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மோசடியை தொடர்பான ஐ.பி.சி 420 பிரிவின் கீழ் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த மூவரையும் அண்ணாநகர் காவல்துறையினர் தேடிவந்தனர்.

மேலும், விமான நிலையங்களில் தப்பி செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பி செல்ல முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை அடையாளம் கண்ட விமானப்படை அலுவலர்கள், அண்ணாநகர் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமாரிடம் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், பத்மஜ் சீனிவாசலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள ஆர்த்தி, ஜோசப் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details