சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று (நவ. 30) நடைபெற்றது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர்கள் மற்றும் நியமன உறுப்பினர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவின்படி 2018-19ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கான இணைப்பு கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டன.