இது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளை மே முதல் ஜூன் வரை நடத்த வாரியம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கு தயாராக போதிய காலமும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டான 2021-22இல் பள்ளிகளைத் திறப்பது குறித்தும், ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்தும் நிறைய பள்ளிகள் கேள்வி எழுப்பியிருந்தன. மாநில அரசின் அனுமதியுடன் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து உரிய கரோனா விதிமுறைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம். பள்ளிகளை முழுமையாகத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்தும் வகையில் மாணவர்களை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்.