ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சரோஜா பேசுகையில், "ஏழை எளிய மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் கர்ப்பிணிகளுக்கு இந்தச் சமுதாய வளைகாப்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மாநிலத்திலுள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
குழந்தை ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடி இல்லாமலும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்திவருகிறது" என்றார்.
தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பொதுநலன் மற்றும் சமூக நல நோக்கத்தோடு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்றார். அதில் தனியார் மருத்துவமனையில் பேரம் பேசுவது போன்ற ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனை இரும்புக்கரம் கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.