சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்காளான டிஎஸ்பி காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் 2007ஆம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் டிஎஸ்பி காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீண்டும் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில் காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரினார். குறிப்பாக, பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.