கடந்த சில ஆண்டுகளாக கோயம்புத்தூர், சத்தியமங்கலம், நீலகிரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் இறக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதுதொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் யானைகளின் மரணம் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை, தந்தங்களுக்காக யானைகள் திட்டமிட்டு கொல்லப்படுகிறதா என்பதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.
முன்னதாக WILD LIFE CRIME CONTROL DIVISION (WCCD) எனப்படும் வன உயிரிகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக சிபிஐ தரப்பில் 2014ஆம் ஆண்டு உடுமலை, சத்தியமங்கலம் பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு, 2021ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் யானை உயிரிழப்பு என 3 சம்பவங்கள் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் இந்த வழக்குகளின் முக்கியப் புள்ளியாக ஈகிள் ராஜன் என்பவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.