சென்னை: 250க்கும் மேற்பட்ட சீன நாட்டினரிடம் தலா 50 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு விசா வழங்கி முறைகேடு செய்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன், தனியார் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையை சேர்ந்த பெல் நிறுவனம், அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் ஆகியோர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கு தொடர்பாக கடந்த மே 17ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான வீட்டிலும் சிபிஐ சோதனை நடைபெற்றது.
சாவி வந்தபின் மீண்டும் ரெய்டு: ஆனால் அப்போது கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீ நிதிக்கு சொந்தமான ஒரு பீரோவை திறக்க சாவி இல்லாததால், அதை திறக்க முடியாமல் அந்த பீரோவுக்கு சிபிஐ அலுவலர்கள் சீல் வைத்து சென்றனர். தற்போது லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து பீரோவின் சாவி பெறப்பட்டதன் அடிப்படையில், மீண்டும் அவரது வீட்டிற்கு சோதனைக்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஜூலை 9) வந்தனர். சுமார் 7 அலுவலர்கள் இச்சோதனையில் ஈடுபட்டனர்.