சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வங்கி அல்லாத நிதி நிறுவன மோசடியில் ஈடுப்பட்ட மூன்று நபர்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை (அக்.17) சோதனை செய்ய சென்றுள்ளனர். இதில் சென்னை வளசரவாக்கம் காமராஜர் சாலை பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஹேமலதா மாரியப்பன் என்பவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், ஹேமலதா மாரியப்பன் கடந்த 11 மாதங்கள் மட்டுமே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்ததாகவும், கடந்த 2020 மே மாதம் வீட்டை விட்டு காலி செய்து சென்று விட்டதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஹேமலதா மாரியப்பன் என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்தும், சிட் பண்ட் மோசடியில் ஈடுபட்டவர் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அந்த வழக்கு தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வருவதாகவும், இந்த நிலையில் ஹேமலதா மாரியப்பன் பல்வேறு இடங்களில், வீடு மாறி, மாறி தங்கி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அவரது வங்கிக் கணக்கில் பரிவர்த்தனைகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹேமலதா மாரியப்பன் தற்போது வடபழனி பகுதியில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்றும் சோதனை செய்து வருகின்றனர்.