சென்னை:தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை விற்பனை கிடங்குகளில் வைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அப்போதைய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளது குறிப்பிடபட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில் வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளும், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்த நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.