சென்னை :சிபிஐக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப் பிரிவில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள், என்.ஜி.ஓக்கள், உள்துறை அமைச்சக அலுவலர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் சில அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சாதகமாக முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
குறிப்பாக இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு மற்றும் புதுப்பித்தல் மற்றும் விதிகளை மீறி வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறுவது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவ்வாறாக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை போலி ஆவணங்கள் மூலம் தவறாக கணக்கு காட்டவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட பிரிவின் அதிகாரி பிரமோத்குமார் பஸின், பல என்ஜிஓ களிடம் லஞ்சம் பெற்று, அதற்கு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு உடந்தையாக இருந்தது தகவல் கிடைத்தது. தன் பெயரில் மட்டும் அல்லாது பல உள்துறை அமைச்சக அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஹவாலா மூலம் லஞ்சமாக என்ஜிஓ களிடமிருந்து முறைகேட்டில் ஈடுபடுவதற்கு லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது.
இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து நேற்று நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அலுவலர்கள் ஹவாலா தரகர்கள் என்ஜிஓ நிர்வாகிகள் என 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 6 பேர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆவர்.
குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட்_ இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் எலக்ட்ரானிக் ஆவணங்களும், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.3.21கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் கோயம்புத்தூரில் உள்ள கங்கா ஆர்தோபெடிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி பவுண்டேஷனுக்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவில் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்குவதற்கு அந்த பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகரன் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்கள் வாகிஸ், சுகுணா ரவிச்சந்திரன் ஆகியோர் மூலம் சுமார் 4 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை சென்னையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ராமானந்த் பரீக்கிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இந்தப் பணத்தை ஹவாலா முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப்பிரிவு ஆணையத்தின் அதிகாரியான பிரமோத் குமார் பஸ்ஸின் என்பவருக்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்பதும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் சார்பில் பல இடைத்தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் கைமாறும் போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில் முக்கிய மத்திய அரசு அதிகாரியான பிரமோத் குமார் பஸின் பல இடைத்தரகர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள என்.ஜி.ஓக்களை தொடர்புகொண்டு அங்கீகாரம் வழங்கவும் புதுப்பித்தலுக்கான அனுமதி வழங்கவும் லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. அதற்கு சில என்.ஜி.ஓக்கள் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அந்த அடிப்படையில் அணிஸ் செல்வராஜ் என்ற தரகர் மூலமாக மாமல்லபுரத்தில் உள்ள சர்ச் ஆப் க்ரிஷ்ட் சாரிட்டபிள் அறக்கட்டளையை சேர்ந்த E.K துரைராஜ் என்பவரிடம் லஞ்சம் கேட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கடலூரில் உள்ள மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த சின்னப்பன் பிச்சை பிள்ளை என்பவரிடம் புதுப்பித்தல் அனுமதிக்காக இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும் தெரியவந்துள்ளது.