சென்னை:ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ் அதிகாரி முருகன்(59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றிய போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாகக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை பல முறை ஐஜி முருகன் பெண் அதிகாரிக்கு செல்போனில் பாலியல் ரீதியாக ஆபாச தகவல் அனுப்பியதாகவும், தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சிபிசிஐடி விசாரணை நடத்தினால் மட்டுமே நியாயம் கிடைக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கானது 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.அதுமட்டுமல்லாது சிபிசிஐடி போலீசார் ஐஜி முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் வழக்கைத் தமிழகத்திலே விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.