சென்னை:அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ், அவரது குடும்பத்தினரைக் கடந்த 2019ஆம் ஆண்டு கடத்தி சொத்துகளை அபகரித்ததாகக் காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் உள்பட 10 பேர் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் காவல் துறை அலுவலர்களுக்கு சம்பந்தம் இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிவகுமார், சரவணன், பாண்டியராஜன், கிரி, பாலா, ஷங்கர், கோடம்பாக்கம் ஸ்ரீ, வெங்கடேஷ், சீனிவாசராவ் உள்பட 10 பேர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கோடம்பாக்கம் ஸ்ரீ கைது
இதனையடுத்து தலைமறைவாக இருந்துவந்த கோடம்பாக்கம் ஸ்ரீ-யை சிபிசிஐடி காவல் துறையினர் ஜூலை 15ஆம் தேதி கைதுசெய்தனர். சென்னையில் காவல் துறையினரையும் ரவுடிகளையும் கூட்டு சேர்த்துவைத்துக்கொண்டு தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் முக்கியமாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டதின் அடிப்படையில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைதுசெய்யப்பட்டார்.
கடத்தலில் தொடர்புடைய காவல் அலுவலர்கள்
அதனைத் தொடர்ந்து இந்தக் கடத்தலில் தொடர்புடைய காவல் அலுவலர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல், சொத்துகள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய ஆந்திர தொழில் அதிபர் வேங்கட சிவநாதகுமார் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கடத்தலுக்கு முக்கியக் காரணம்
விஜயவாடாவில் தலைமறைவாக இருந்த வேங்கட சிவநாதகுமாரை சிபிசிஐடி தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் மீது ஆந்திராவில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கடத்தலுக்கு முக்கியக் காரணமாக வேங்கட சிவநாதகுமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், வேங்கட சிவநாதகுமார் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற தொழிலதிபரிடம் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இதில் 10 கோடி ரூபாயை ரொக்கமாக வெங்கடேசனுக்கு வேங்கட சிவநாதகுமார் கொடுத்துள்ளார். ஐந்து கோடி ரூபாய்க்கு பல்வேறு புராஜெக்ட்கள் செய்துதருவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் வெங்கடேசன் தொழில் இழப்பு ஏற்பட்டு எந்தவித புராஜெக்ட்டும் செய்து கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் வேங்கட சிவநாதகுமார், வாங்கிய தனியார் ஐடி நிறுவனத்தை நடத்த முடியாமல் நஷ்டம் அடைந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசனிடம் ஐடி நிறுவனத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும், தான் கொடுத்த 10 கோடி ரூபாயைத் திருப்பித்தருமாறு வேங்கட சிவநாதகுமார் கேட்டுள்ளார்.
ஏன் கடத்தல்? - வாக்குமூலம்
விற்பனை செய்த நிறுவனத்தை மீண்டும் வாங்கிக்கொள்ள முடியாது, பணத்தைத் திருப்பித் தர முடியாது என வெங்கடேசன் தெரிவித்ததை அடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்ற ரவுடி கும்பல் தலைவன், அவரது மகன் தருண் பிரகாஷ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, வேங்கட சிவநாதகுமார் பணத்தை வசூல்செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.