முதலமைச்சர் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பிற்காக வந்த சிறப்பு டிஜிபி, காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள் துறையைக் கவனிக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகரிடமும், காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதியிடமும் புகார் அளித்தார்.
இதுமட்டுமின்றி அவர் சிறப்பு டிஜிபி மீது புகாரளிக்கச் சென்றபோது, அவரை செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். மேலும், 10-க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் காவல் துறைத் தலைவரைச் சந்தித்து சிறப்பு டிஜிபியை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கப் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. உடனடியாகச் சிறப்பு டிஜிபியை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் முதலில் பணியிட மாற்றம் செய்த நிலையில், பின்னர் இடைநீக்கம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.