தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு: சிபிசிஐடி மீண்டும் விசாரணை - சிபிசிஐடி

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்குத்தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக அலுவலகம் கலவர வழக்கு : சிபிசிஐடி மீண்டும் விசாரணை
அதிமுக அலுவலகம் கலவர வழக்கு : சிபிசிஐடி மீண்டும் விசாரணை

By

Published : Sep 15, 2022, 6:44 PM IST

சென்னை:கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புகளில் புகார்கள் பெறப்பட்டு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

தொடர்ந்து அதிமுக கலவர வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த ஏழாம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருக்கும் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கலவரத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கலவரம் நடந்த அன்று சிசிடிவி கேமரா பதிவுகளை விசாரணைக்காக எடுத்துச்சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்பில் விசாரணை முறையாக துரிதப்படுத்தப்படவில்லை என்று மேலும் ஒரு மனு தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று(செப்.14) சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் ஒன்றரை மணி நேரமாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நூற்றுக்கணக்கான கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கலவரத்திற்கு முக்கியக்காரணம் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஜே.சி.டி பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் தங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என வழக்கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மதியம் 2.50 மணியளவில் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கலவர வழக்குத் தொடர்பாக புகார் கொடுத்த சி.வி. சண்முகத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வருகிற 19ஆம் தேதி இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால், துரிதமாக விசாரணை நடத்தி ஆவணங்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் எனக்கூறி திமுகவினர் தங்களது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றனர் - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details