தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபரைக் கடத்தி சொத்துகள் அபகரிப்பு: 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு! - சென்னை காவல்துறை

தொழிலதிபர், அவரது குடும்பத்தினரைக் கடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில், 6 காவல்துறையினர் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

By

Published : Jun 28, 2021, 5:48 PM IST

சென்னை:தொழிலதிபர் ராஜேஷ் என்பவர், தன்னையும், தன் குடும்பத்தினரையும் கடத்திச் சென்று சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ், காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மீது கடந்த 2019ஆம் ஆண்டு புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அப்புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ராஜேஷ் புகார் அளித்தார். காவல்துறை அலுவலர்கள் மீதும் புகார் இருப்பதால், அப்புகார், சென்னை ஆணையரகத்தில் இருந்து, டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழ்நாடு டிஜிபி, அந்தப்புகார் குறித்து முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்; இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட புகாரில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், தொழிலதிபர் சீனிவாசராவ், தான் கொடுத்த கடனுக்காக தொழிலதிபர் ராஜேஷிற்கு ரவுடிகள் மூலமாகவும் காவல்துறை அலுவலர்கள் மூலமாகவும் பிரச்சினை கொடுத்தது தெரிய வந்தது. சிபிசிஐடியின் விசாரணையில், புகார் தெரிவிக்கப்பட்ட காவல்துறை அலுவலர்களுக்கு இச்சம்பவத்தில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விரிவான அறிக்கை தாக்கல்

இதுகுறித்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, தமிழ்நாடு டிஜிபிக்கு விரிவான அறிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை ஆய்வு செய்த டிஜிபி சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர், கோடம்பாக்கம் ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு

பொய்யான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றும் நோக்கத்தில் போலி ஆவணம் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ச்சியாக, அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன் பின்பு கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

உதவி ஆணையர் சிவக்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்துவரும் நிலையில், ஆய்வாளர் சரவணன் தற்போது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்பே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க:தொழிலதிபரை மிரட்டி வாங்கிய சொத்து: 6 காவல் துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details