கரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவது தொடர்பாக மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
பின்னர் சென்னை எழிழகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் 32 ஆயியிரத்து 221 பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 88 ஆயிரத்து 700 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாநில பேரிடர் மீட்பு படையினர் 953 பேரும் முதல்நிலை மீட்புக் குழுவினர் சுமார் 44 ஆயிரம் பேரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்து 131 பேரில் 711 பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். மற்றவர்கள் டெல்லி போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளனர். இந்த 711 பேரில் 617 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் போர்க்கால அடிப்படையில் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.