தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரை மிரட்டும் மாடுகள்.. தீர்வு என்ன? - roads of Chennai

Chennai Stray Cattle: பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாத உரிமையாளர்கள்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 7:20 PM IST

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை மாடு முட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிஷ்டவசமாக மாணவிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.

அரும்பாக்கம் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு தெருக்களும் கால்நடைகளின் கூடாரமாவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில், கழிவு காய்கறிகளை உண்பதற்காகவே பெரும் எண்ணிக்கையில் கால்நடைகள் படையெடுக்கின்றன. மாநகரின் முக்கியமான பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால் போக்குவரத்து நெருக்கடிக்கும் விபத்துக்களுக்கும் இந்த கால்நடைகள் காரணமாக அமைகின்றன.

சில நேரங்களில் மாடுகள் கடைகளில் வைக்கபட்டுள்ள காய்கறிகளை தின்று விடுவதாகவும், அவ்வபோது அவைகளை விரட்ட முற்படும் போது அருகில் பொதுமக்கள் இருப்பதால் அவர்கள் மீது மாடு முட்டி விடுமோ என அப்படியே விட்டுவிடுவதாகும் இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோயம்பேடு சந்தையின் சிறு மொத்த வியாபாரிகளின் நலசங்க தலைவரிடம் கேட்ட போது, "கோயம்பேடு சந்தையில் மாடுகள் சுற்றி திரிவது தொடர்பாக சந்தைக்கு வரக்கூடிய மாநகராட்சி அதிகாரிகரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சுமார் 300 முதல் 500 மாடுகள் வரை சந்தை முழுவதும் சுற்றி திரிகின்றன என்றார். முக்கியமான பண்டிகை நாட்கள் மற்றும் மக்கள் அதிகம் சந்தைக்கு வரக்கூடிய விடுமுறை நாட்களில் மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் சிறு வியாபாரிகளின் விற்பனை பெருமளவில் பாதிக்கபடுகிறது" என வேதனை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்னண் விளக்கம்: மாடு விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, சென்னையில் மாடுகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடம் எவ்வளவு வளர்ப்பு மாடுகள் உள்ளது என்பது குறித்தான தரவுகளை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது வெளியில் குறிப்பாக சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராயநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை மற்றும் இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிளெல்லாம் மாடுகள் சுற்றி திரிந்தால் உடனடியாக அவைகளை பிடிக்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளதாகவும், உரிமையாளருக்கு அபாரத தொகையை விதிக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பிடிக்கபட்ட மாடுகள் உரிமையாளர்களிடம் ஓப்படைக்கும் போது அவர்களிடம் இனி மாடுகள் பொது வெளியில் அனுப்பமாட்டோம் என எழுதி வாங்கி கொள்ளமாரும் அறிவுறுத்தபட்டுள்ளதாகவும், அதற்கு பிறகும் மாடுகள் வெளியில் சுற்றி திரிந்தால் அவைகளை வேறு எங்காவது அப்புறபடுத்தலாமா அல்லது வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், மாடுகளை தங்கள் வீட்டிலே வளர்ப்பதற்கான இட வசதி இல்லாதவர்களுக்கு வேறு என்ன வசதி ஏற்படுத்தி தரலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நேற்று மட்டும் திருவல்லிக்கேணி,மயிலாப்பூர் ,பெசன்ட் நகர் குடிசைப் பகுதி,கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்துள்ளதாக அவர் கூறினார்.கோயம்பேடு சந்தை பகுதியிலும் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த மண்டலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் (மண்டலம்-10) விளக்கம்: மண்டலம் 10 (கோயம்பேடு முதல் கோடம்பாக்கம் வரை) பகுதியில் பொது வெளியில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தது மேலும் கோயம்பேடு சந்தையிலும் அதிகமாக மாடுகள் சுற்றி திரிவதாகவும் வியாபாரிகள் தரப்பிலிருந்து புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வந்தது இதனால் பொது வெளி மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்துள்ளோம் இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கபட்டுள்ளது என மண்டலம் 10த்தின் மாநகராட்சி அதிகாரி சத்தியவேல் தெரிவித்தார்.

மாடு உரிமையாளர்களின் பதில்: எல்லோரும் தாங்கள் வளர்க்கும் மாடுகளை தெருவிலோ அல்லது சாலையில் திரியவோ விடுவதில்லை அதேபோல் ஒரு சிலர் இதை வியாபர நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். குறிப்பாக மாடுகளில் இருந்த காலை மற்றும் மாலை நேரத்தில் பால் கறந்து விட்டு அப்படியே சாலையில் விட்டுவிடுவதையும் ஒரு சிலர் வாடிக்கையாக வைத்திள்ளனர்.

மேலும் முன்பெல்லாம் மாடுகளின் மேய்ச்சலுக்காக பல இடங்கள் இருந்தன ஆனால் இப்போது அப்படியல்ல அவைகள் சுற்றி திரிந்த இடமெல்லாம் இப்போது கட்டங்களாக ஆகியதால் அவைகளுக்கென்று மாடு வளர்ப்போர் ஒரு தொழுவம் கட்ட வேண்டியுள்ளது என சென்னையில் மாடு வளர்க்கும் சரவணன் என்பவர் கூறினார்.

மேலும் முன்பு இருந்தது போல் இப்போது மாடுகளில் இருந்து பால் எடுப்பது மட்டுமே தொழிலாக இங்கு பலர் செய்வதில்லை என்றும் கன்று ஈன்றவுடன் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவைகளை விற்பனை செய்து விடுகின்றனர் இதையும் இப்போது ஒரு தொழிலாக ஒரு சிலர் செய்து வருவதாகவும் அவர்கள் தான் மாடுகளை தொழுவத்தில் கட்டி வைக்காமல் சாலைகளிலோ அல்லது பொதுவெளியிலோ விட்டு விடுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:குதிரை கடித்ததில் மூவர் படுகாயம்: பொதுமக்கள் துரத்திச் சென்றதில் கீழே விழுந்த குதிரை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details