சென்னை: தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க இயற்றப்பட்ட குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 1989 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்த விதிகள் 1995 ஆகியவற்றின் செயல்பாடுகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட தீருதவிகள், மறுவாழ்வு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
பல்வேறு விவரங்கள் குறித்து விவாதம்
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்ற விவரம், வன்கொடுமையைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயல்பாடு, சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும் விதம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள், தண்டனையில் முடிவுற்ற வழக்குகள்.
சமூகநீதி விழிப்புணர்வு முகாம்கள், மக்கள் விழிப்புணர்வுப் பேரணிகள், சமபந்தி விருந்து, வன்கொடுமை கிராமங்களைத் தேர்வு செய்தல், தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இணக்கமுடன் வாழும் கிராமங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் சரியாக விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது மற்றும் தீர்வு காணப்பட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சமூக அமைப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது. சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது" என்றார்.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் தமா.மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் மூத்த புலனாய்வு அலுவலர் எஸ். லிஸ்டர், தேசிய பழங்குடியினர் நல ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் லலித் லாட்டா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தீண்டாமை சம்பவங்களை கேள்விப்படும்போது கோபம் வருகிறது- முதலமைச்சர்