சென்னை:உயர்கல்வித்துறை செயலாளர் பொறுப்பு இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை, துறை மூலமாக எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்ஏ வரலாறு பருவத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வியில், மஹர்,நாடார்,ஈழவர், அரிஜன் ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு இவற்றுள் "தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் எம்ஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வில் கேள்வி இடம் பெற்று இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார். அதில், "வினாத்தாள்கள் வெளிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கான வழக்கம் இல்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை குறித்து செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்கலாம்