சென்னை: மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்தின் முன்பு கடந்த 11ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வேல்முருகன் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தார் மற்றும் மலைக்குறவர் சமுதாய கூட்டமைப்பினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேல்முருகனின் உடல் முதல் மனைவியான வெண்ணிலாவிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கணவரின் முகத்தை பார்க்கவிடாமல் உடலை எரித்துவிட்டதாக வேல்முருகனின் இரண்டாவது மனைவி சித்ரா குற்றம் சாட்டினார். தனது மகனுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென நேற்று(அக்.15) காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்ரா மனு அளித்திருந்தார்.