சென்னையைச் சேர்ந்த சரவணன் பழனிசாமி என்பவர் ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் டைனிங் டேபிள் ஒன்று ரூ.3000 என விளம்பரப்படுத்தியிருந்ததைக் கவனித்துள்ளார்.
அந்த டைனிங் டேபிளை வாங்குவதற்காக ஓஎல்எக்ஸ் நபருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். பின்னர், 3000 ரூபாயை போன் பே மூலமாகத் தன்னுடைய கைப்பேசி எண்ணுக்கு அனுப்புமாறு சரவணனிடம் ஓஎல்எக்ஸ் நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சரவணன் 3000 ரூபாயை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பிய பிறகு அந்தக் கைப்பேசி எண் உடனடியாக அணைக்கப்பட்டுள்ளது (ஸ்விட்ச்ஆப்). தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த சரவணன் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரின் கைப்பேசி எண், வங்கிக் கணக்கை வைத்து தீவிரமாகத் தேடியுள்ளனர்.
விசாரணையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் ஒன்றில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிலிருந்து அடிக்கடி பணம் எடுப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு விரைந்து மோசடி நபரை கைதுசெய்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (35) என்பது தெரியவந்தது. இவர் ஓஎல்எக்ஸில் தனது பெயர், முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்களைத் தருவதாகக் கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடிசெய்து அந்தப் பணத்தில் உல்லாச வாழ்க்கை அனுபவித்துவந்ததும் தெரியவந்தது.
இவரிடமிருந்து மடிக்கணினி, சிம் கார்டுகள், வங்கிப் புத்தகம், மெமரி கார்டுகள் போன்றவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சரவணகுமாரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.