சென்னை நீலாங்கரை கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் சேதுலிங்கம்(29). இவர் சொந்தமாக கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நீலாங்கரை மரைக்காயர் தெருவை சேர்ந்த பாலகுமார்(49) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு சேதுலிங்கத்தின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மேட்ரிமோனி நிறுவனம் ஒன்றை தொடங்க போவதாகவும், அதற்கு கணினிகள் தேவைப்படுவதாக கூறி ரூபாய் 2 லட்சத்து 66 ஆயிரத்திற்கு பல கணினிகளை வாங்கியுள்ளார்.
மேலும் பாலகுமார் 2.66 லட்சத்திற்கான காசோலையை சேதுலிங்கத்திடம் வழங்கியுள்ளார். காசோலையை பெற்று கொண்ட சேதுலிங்கம் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்ததைடுத்து, பாலகுமாரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்ததோடு, பணம் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் பாலகுமார் பணத்தை தந்து விடுவதாக கூறி நீண்ட மாதங்களாக அலைகழித்து வந்துள்ளார்.
இதனையடுத்து பாலகுமாரின் வீட்டிற்கு சென்ற சேதுலிங்கம், பணத்தை பற்றி கேட்டதற்கு, பணத்தை கொடுக்கமுடியாது என்று அவர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுலிங்கம் இது குறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலகுமாரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.