சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாகியது.
அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சிபியு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி. சண்முகம் கடந்த 23ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தை சூறையாடியதுடன் பொது சொத்துகளை சேதப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.