சென்னை:108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் சவுரிராஜா பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு வைகாசியிலும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படவில்லை.
பிரமோற்சவத்திற்கு உத்தரவிட மனு
ஆகையால் இந்தாண்டு முடிவடைவதற்கு முன்பு பிராயசித்தங்களுடன் பிரமோற்சவ விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் என திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் கோயில் மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஆகம விதிகளில் கூறியுள்ள படி எதிர்காலத்தில் உற்சவங்களை நடத்த வைணவ சமயத்தை சேர்ந்த ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய உற்சவ குழுவை அமைக்க உத்தரவேண்டும் என கோரியுள்ளார்.
பதிலளிக்க உத்தரவு
இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமையில் வழக்கறிஞர், உற்சவங்கள் நடத்துவது தொடர்பாக கோயிலுக்கு தொடர்பில்லாதவர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோர முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து இம்மனுவுக்கு தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழிசை மீதான அவதூறு வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்