சென்னை:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய்த் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயதுடைய ஸ்னோலின் என்ற இளம் பெண்ணின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.