தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக சின்னம், கொடி பயன்படுத்த தடை கோரிய வழக்கு - ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்ற செய்திகள்

EPS case against OPS: அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:41 PM IST

சென்னை:அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அதிமுகவில், ஒற்றை தலைமையை கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னை அதிமுகவின் பொது செயலாளர் என தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவரை ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். இது தொண்டர்களுக்கு இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அதிமுக கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்.” என தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை கட்சி பெயர் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி, இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - சிபிஐ பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details