சென்னை:செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ.சி. முத்தையா கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அதில், ’எம்.ஏ.எம். ராமசாமியின் தந்தையும், தனது தந்தையும் சகோதரர்கள் என்றும், தாங்கள் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.எம் ராமசாமி கடந்த 1996ஆம் ஆண்டு ஐயப்பன் என்பவரை தத்தெடுத்துக்கொண்டார். நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிராக, எதிர்ப்புகளை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் சட்டவிதிகளுக்கு மாறாக தத்து எடுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்து கொண்டு, தனது பதவியை துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம் ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.
தொடர்ந்து அவருக்குச்சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துகளை அபகரித்துக்கொண்டார். மேலும், தனது உயிலைப்பதிவு செய்யும்போது தனது அசையும், அசையா சொத்துகளை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்தார் என்றும்; தன்னை முறையாக ஐயப்பன் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டதாக சுட்டிகாட்டியுள்ளார்.
எம்.ஏ.எம். ராமசாமி வாழ்ந்த காலத்தில் அவருக்கு துரோகம் செய்த ஐயப்பன், மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது தானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் சார்பகாவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கியதால், வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு உள்ளதா? என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் ஏ.சி. முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் அவர்கள் நேரில் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் மூலமே எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ததாகத்தெரிவித்தார்.
எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமசாமி ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தாலும், அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை, அனைத்து ஆவணங்களையும் தீவிரமாகப் பரிசீலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கூறப்பட்டது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தபோது, மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் ஆஜராகி, வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்க மனுதாரருக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், ரத்தசொந்தமும் கிடையாது என்றும் வாதிட்டார். இதையடுத்து ஏ.சி. முத்தையாவின் மனுவை தள்ளுபடி செய்து, உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகனின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைப்பு