தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் இணைப்புடன் ஆதார் பதிவு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - Court news

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி பயனாளர்களை வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

By

Published : Dec 7, 2022, 12:50 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதேநேரம் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. எனவே இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூறிய அரசாணையை ரத்து செய்யக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின் புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால், அதற்கு மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து வழங்க வேண்டும்.

ஆதார் இணைப்பு சமூக நல திட்டப் பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால், மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.7) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. மேலும் இம்மனு தொடர்பான விசாரணை நாளை (டிச.08) தள்ளி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆதார் எண், மின் நுகர்வோர் எண் இணைப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details