சென்னை:பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் விக்ரமன். இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞரும், லண்டனில் ஆய்வு பட்டம் மேற்கொண்டு வரக் கூடியவருமான பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் சமூக வலைதளம் மூலம் விக்ரமன் தனக்கு அறிமுகமாகி பிறகு காதலித்து வந்ததாகவும், மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளித்தார்.
அது மட்டுமின்றி தனது படிப்பு செலவிற்காக கிடைக்கும் ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாகவும், தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அந்தப் புகாரானது சென்னை வடபழனி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து வடபழனி மகளிர் போலீசார் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் அந்த புகாரை நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வடபழனி மகளிர் போலீசார் விக்ரமன் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.