சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும் எனவே தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை எங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், மேலும் சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் வழக்கு தொடர்ந்த பிறகு தான் தங்களுக்கு தெரிய வந்தால் அது தொடர்பாக வழக்கில் கோரிக்கையில் மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இரண்டு கூடுதல் மனுகள் சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் தாக்கல் செய்யபட்டது.
இந்த கூடுதல் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணைக்கு வந்தது. நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் வழக்கறிஞர் உமா சங்கர் மற்றும் ஸ்ரீ தேவி ஆஜராகினர். அப்போது அனைத்து சொத்துக்களிலும் சமபங்கு உள்ளதாகவும் சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பான சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதாடினார்.