சென்னை:(Saline Land Rent Issue) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒன்றியஅரசுக்குச் சொந்தமான உப்பளங்கள், உப்பு உற்பத்தியாளர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன.
இந்த நிலங்களுக்கான ஒதுக்கீட்டுக் கட்டணத்தை ஏக்கருக்கு 100 ரூபாயாகவும், வாடகையை ஏக்கருக்கு 120 ரூபாயாகவும் உயர்த்தி கடந்த 2013ஆம் ஆண்டு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி:
இந்த உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வாடகை மற்றும் நிலம் ஒதுக்கீட்டுக்கானக் கட்டணங்களை உயர்த்தி ஒன்றிய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், 20 ஆண்டுகள் குத்தகைக் காலம் முடிந்து விட்டதாகவும், அது தன்னிச்சையாகப் புதுப்பிக்கப்பட்டதாகக் கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, உரிமம் எடுத்தவர்கள் நிலத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும், மீண்டும் குத்தகைக்கு டெண்டர் விடும் போது அதில் மனுதாரர்கள் பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்