சென்னை: வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேரந்த கூலி தொழிலாளி ரவி மற்றும் உஷா தம்பதியரின் மகள் பிரியா (17). இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. கடந்த அக். 28 ஆம் தேதி அவர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பிரியாவிற்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் மாணவி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த நவ. 8 தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையின்போது மாணவி பிரியாவிற்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால், அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவி பிரியாவின் உடல்நிலை கடந்த நவ.14 ஆம் தேதி திடீரென கவலைக்கிடமானது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மாணவி பிரியாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக நவ.15 ஆம் தேதி காலை கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என தெரியவந்தது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோல காவல்துறை சார்பிலும் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பெரவள்ளூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரின் இருப்பிடம், குடும்ப விவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்த போலீசார், அவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்கள் எங்கு உள்ளனர் என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு மாணவி பிரியா மரண வழக்கு தொடர்பாக தேவையான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கையை காவல்துறைக்கு அனுப்பும்படி 12 கேள்விகளுடன் காவல்துறை சார்பில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தனிக்குழு நடத்தி முடித்த விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை, மருத்துவ கல்வி இயக்குநரகம் மூலம் நேற்று மாலை (நவ.17) காவல்துறையிடம் வழங்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில் மாணவி பிரியாவின் மரணம் மருத்துவர்களின் அஜாக்கிரதையாலும், தவறான சிகிச்சையின் காரணமாகவும் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் அறுவை சிகிச்சை செய்தவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பணியில் இருந்த வார்டு ஊழியர் ஆகிய 5 பேர் மீது தவறு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் உட்பட இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தனிக்குழு விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறை மூலம் சட்ட வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டு, எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் உட்பட 5 பேர் மீது 304 (a) அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக தனிக்குழு மருத்துவ அறிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்பித்து சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் இருவர் உட்பட இதில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆணையை அவர்கள் வாங்காததால் வீட்டின் கதவில் மருத்துவப் பணியாளர்கள் ஒட்டி வந்தனர்.
தற்போது சம்மன் கொடுத்தாலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க வாய்ப்பிருப்பதால் மருத்துவர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: விரைவில் மருத்துவர்கள் கைது?