தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2020, 11:47 PM IST

ETV Bharat / state

ஆவடியில் தாது மணல் திருட்டு... அதிமுக நகரச் செயலாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: ஆவடி சேக்காடு ஏரியில் தாது மணல் திருடிய விவகாரத்தில், ஆவடி நகரச் செயலாளர் ஆர்.சி. தீனதயாளன் மீதும் அவரது மகன் மீதும் 5 பிரிவுகளின் கீழ், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

lorry
lorry

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பெரிய ஏரியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு தாது மணல் திருட்டு நடைபெறுவதாக திருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியாக தாது மணல் ஏற்றிச் சென்ற லாரியை, மடக்கிப் பிடித்து விசாரித்ததில் மணல் திருடப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தாது மணல் ஏற்றிச்சென்ற அதிமுக நகரச் செயலாளரின் லாரியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி அதிமுக நகரச் செயலாளர் ஆர்.சி. தீனதயாளன், நகராட்சி ஒப்பந்ததாரரான அவரது மகன் ஹேமந்த் ஆகிய இருவரும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் அளித்தப் புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் துறையினர் அதிமுக நகரச் செயலாளர் மீதும், அவரது மகன் மீதும் தாது மணல் திருட்டு, அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலறிந்து தலைமறைவாகியுள்ள இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details