சென்னை:தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (ஜூலை 2) காலையில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அரங்கநாதன் சுரங்கப்பாதையின் கிழக்குப் பகுதியில், 70 அடி சாலையின் தெற்கில் உள்ள வீட்டின் உரிமையாளர், தனது வீட்டிற்காக சாலையின் நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி மேற்கொண்டிருந்தது தெரியவந்தது.
ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது வெளியேற்றப்படும் ஈரக் களிமண் கொண்ட கழிவானது, சாலை முழுவதும் பரவிக் கிடந்ததையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்தார். இதையடுத்து உடனடியாக இந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, இதனை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியினை மேற்கொண்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டார். பின்னர், செயற்பொறியாளர் புருசோத்தமன் வாயிலாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சாலையின் நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைத்த வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டிய போர்வெல் காண்டிராக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட போர்வெல் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் காரணமாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.