சென்னை: இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாத தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள், போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் போன்ற பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் என்ஐஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு என்ஐஏ அமைப்பு உருவானது. தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒப்புதல் இன்றியே வழக்குகளை என்ஐஏ அமைப்பானது தனது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும். மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகே என்ஐஏ போன்ற அமைப்பின் தேவை உணரப்பட்டது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது ஹைதராபாத், கவுகாத்தி, கொச்சி, மும்பை, கொல்கத்தா, ஜம்மு- காஷ்மீர், சண்டிகார், ராஞ்சி, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. என்ஐஏ அமைப்பானது கடந்த 2022ஆம் ஆண்டு 73 வழக்குகளை இந்தியா முழுவதும் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டைவிட 19.67 சதவீதம் அதிகம். இதுவரை என்ஐஏ அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு அதிகமான வழக்குகள் கடந்த 2022ஆம் ஆண்டுதான் பதிவு செய்துள்ளது.
இந்த 73 வழக்குகளில் 35 வழக்குகள் ஜிகாதி எனப்படும் பயங்கரவாத செயலில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புடையது என்கிறது என்ஐஏவின் புள்ளி விவரங்கள். ஜம்மு-காஷ்மீர், அசாம், பீகார், தெலுங்கானா, மேற்குவங்கம், கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகள் பி.எப்.ஐ அமைப்பு தொடர்பானவை, 3 வழக்குகள் கடத்தல் தொடர்புடையவை என தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 59 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.368 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்தாக என்ஐஏவின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.