சென்னை: சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும்விதத்தில் ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் விதிகளை (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்ட விதிகள் 2021) கொண்டுவந்தது.
இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு, காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசன், பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
அந்த மனுவில், "புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்க தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தன்னிச்சையானது.
செய்திகளை முடக்க அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
அதேசமயம், இந்த விதியின்கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, ஏற்கனவே இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல்செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு - Case against new IT rules
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் புதிய விதியின்கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
![புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு புதிய தகவல் தொழில்நுட்ப விதிளை எதிர்த்து வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12233469-thumbnail-3x2-twitter.jpg)
புதிய தகவல் தொழில்நுட்ப விதிளை எதிர்த்து வழக்கு
TAGGED:
Case against new IT rules