தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதத்தை ரத்துசெய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாதோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

challenge
challenge

By

Published : Dec 1, 2020, 1:42 PM IST

கரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்து, அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.

சுகாதாரத் துறைச் செயலர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக் கவசம் அணியாதது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளைப் பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.

1939ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை, சுகாதாரத் துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்தச் சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான ஆர். முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கெனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றிற்கான ஆவணங்களைத் தாக்கல்செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது.

அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அபராதம் விதிப்பது தொடர்பாக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details