சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரையைச் சேர்ந்த ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல், டான்ஸ்மாஸ்டர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு இன்டர்நேஷ்னல் ஆண்ட்டி கரெப்ஷன் அண்ட் ஹூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கடந்த பிப்.26ஆம் தேதி வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்பளங்களை பயன்படுத்தி போலி கௌரவ பட்டம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவியதால் சர்ச்சையானது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அமைப்பின் இயக்குநரான ஹரிஷ் என்பவர், கின்னஸ் சாதனைப் புரிந்தவர்களுக்கும், சர்வதேச சாம்பியன்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவதாகக் கூறி கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதை அண்ணா பல்கலைக்கழக டீனால் கருத்தில் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அதன் பிறகு ஹரிஷ் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் கடிதம் கொடுக்கப்பட்டதால், அவரது மரியாதையின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் அளித்தது போன்று வழங்கப்பட்ட கடிதம் போலியானது என அவரே மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.