சென்னை:விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்பதும்; மெத்தனால் என்ற விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.
இவ்வாறு முறைகேடாக விற்கப்பட்ட சாராயத்தால் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் சேர்க்கப்பட்டதனை முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் கண்டுபிடித்ததோடு இதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விஷச்சாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய ரசாயன ஆலை உரிமையாளார் இளைய நம்பி உட்பட 17 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர், இந்த வழக்கின் தீவிரத் தன்மையை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க விஷச்சாராயம் தொடர்பான மூன்று வழக்குகளையும் (CBCID investigation on Illicit Liquor death in TN) சி.பி.சி.ஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.