சென்னை:ஒவ்வொரு ஆண்டும் தமீழிழத்தில் மக்களுக்காக போராடி இன்னூயிர் ஈத்த வீரர்களை நினைவு கூறும் தினமாக நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர்கள் தினமாக ஈழத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (நவ.27) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவகத்தில் மாவீரர்கள் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழ் தேசிய முதுபெரும் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரபாகரன் மகள் துவாரகா என்பவரின் காணொளி வெளியிடப்பட்டது. இந்த காணொளியில் தோன்றிய துவாரகா சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக பேசினார்.
அதில் "நான் துவாரகா கதைக்கிறேன். அண்ணா பல்வேறு சவால்கள் ஆபத்துக்களைத் தாண்டி நான் உங்கள் முன் பேசுகிறேன். நாம் சிங்களத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து பயணிப்போம்" என தொடர்ந்து 10 நிமிடங்களுக்கும் மேலாக துவாரகா பேசியிருந்த காணொளி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இவர் தான் உண்மையான துவாரகா என ஒரு தரப்பினரும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கபட்ட வீடியோ என இன்னொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சந்தேகமும் - பின்னணியும் : தமிழ் தேசிய முதுபெரும் தலைவர் பழ.நெடுமாறன் பல இடங்களில் பிரபாகரன் குடும்பத்தில் மனைவி மதிவதனி மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், இருவரும் சரியான நேரம் வரும் பொழுது பொதுவெளியில் வருவார்கள் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்திருந்த நிலையில், நேற்று இந்த காணொளி வெளியிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
இந்த வீடியோ சர்ச்சை எழுப்பியிருந்த நிலையில், கார்டூனிஸ்ட் பாலா தனது X வலைதளப்பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், "ஒரு வேளை தலைவர் மேதகு அவர்களின் மகள்தான் இவர் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. ஆனால் முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக ஓவியனாக சொல்கிறேன். 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல" என பதிவில் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க:திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கு - சந்திரபாபு நாயுடுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! என்ன காரணம்?