சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் பெருமளவில் மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சிளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மழை நீர் வெள்ளப் பெருக்காக ஓடுகின்றன. மேலும் பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவு நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பெருகெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.