கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கட்ஆப் மதிப்பெண் குறித்து வெளியிட்ட வீடியோ சென்னை: தமிழ்நாடு பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கட்ஆப் மதிப்பெண் குறித்து பேசிய கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, "தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவ மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது கணிப்பு படியே இந்த வருடமும் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த வருடம் 200க்கு 200 என்பது 132 பேர் வாங்கியிருந்தனர். இந்த வருடம் 102 பேர் வாங்கி இருக்கின்றனர். 195-க்கும் மேல் கடந்த வருடம் 3 ஆயிரத்துக்கு 500 பேர் வாங்கியிருந்தனர். இந்த வருடம் 2,913 பேர்தான் வாங்கியுள்ளனர். 190க்கு மேல் கடந்த வருடம் 8 ஆயிரம் பேருக்கு மேல் வாங்கியிருந்தனர். இந்த வருடம் 7ஆயிரம் பேருக்கு மேல் வாங்கி இருக்கின்றனர். 185க்கு மேல் கடந்த ஆண்டு 14ஆயிரம் பேருக்கு மேல் வாங்கியிருந்தனர் இந்த வருடம் 12,000 பேருக்கு மேல் வாங்கி இருக்கின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "180க்கு மேல் கடந்த வருடம் 20,700 மேல் வாங்கியிருந்தனர். இந்த வருடம் 18 ஆயிரத்துக்கு 825 பேர் வாங்கி இருக்கின்றனர். 175க்கு மேல் 27 ஆயிரத்து 756 பேர் வாங்கியிருந்தனர் இந்த வருடம் 25 ஆயிரத்து 556 பேர் வாங்கியுள்ளனர். 170க்கு மேல் 35ஆயிரத்துக்கு 103 பேர் வாங்கியிருந்தனர், ஆனால் இந்த வருடம் 33ஆயிரத்து 54 பேர் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் 160க்கு மேல் 50 ஆயிரத்து 208 பேர் இருந்தனர். இந்த வருடம் 50 ஆயிரத்து 113 பேர் வாங்கி இருக்கின்றனர். கட்ஆப் 100-ல் இருந்து 140 வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
170க்கு மேல் கட்ஆப் எடுத்தவர்கள் கடந்தாண்டு அதே கட்ஆப்பில் அதே கல்லூரி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 160க்கு கீழ் கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரி கிடைப்பதற்கு சவாலாக இருக்கும். அதனால், கடந்த முறை கிடைத்த கல்லூரிகளில் ஐந்து கட்ஆப் மதிப்பெண் அதிகரித்து ஆராய வேண்டும். உதாரணத்திற்கு, கடந்த முறை 140 கட்ஆப் மதிப்பெண்ணுக்கு ஒரு கல்லூரி கிடைத்திருக்கும். இந்த ஆண்டு அதே கல்லூரிக்கு 145 மதிப்பெண்கள் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க:பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு தொடங்கும் தேதி ஒத்திவைப்பு!