சென்னை:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). வாடகை கார் ஓட்டுநரான இவர், தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி 3 மணியளவில், அவரது தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரது வங்கிகணக்கில் அந்த பணத்தை உறுதி செய்வதற்காக, ரூபாய் 21 ஆயிரத்தை அவரது நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் ஆகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியை தலைமையிடமாக வைத்து இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை மேலாளர் இது குறித்து ராஜ்குமாரை தொடர்புகொண்டு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக பணம் மாற்றப்பட்டுள்ளது என்றும் பணத்தை வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தன் நண்பருக்கு அனுப்பிய ரூ.21 ஆயிரத்தை ராஜ்குமார் திருப்பித் தர வேண்டாமென தெரிவித்த வங்கி அதிகாரிகள், கார் வாங்க கடனுதவி செய்வதாகவும் உறுதியளித்து ராஜ்குமாரை அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இந்தத் தொகை பெரிய அளவில் இருப்பதனால் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என எண்ணி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைமில் இன்று(செப்.23) புகார் அளித்து உள்ளார். மேலும் அந்தப்புகாரில், தவறுதலாக அவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் யாருடையது என்று கூட தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.